ரம்ஜான் கொண்டாட்டம்..! 10 ஆயிரம் பேருக்கு இலவச பிரியாணி! – கலகலக்கும் கோவை!
இன்று தமிழ்நாட்டில் ரம்ஜான் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கோவையில் பல இடங்களில் மக்களுக்கு விநியோகிக்க இஸ்லாமிய மக்கள் பிரியாணி தயார் செய்து வருகின்றனர்.
அன்பையும், சகோதரத்துவத்தையும் போற்றும் இஸ்லாமிய பண்டிகையாக ரம்ஜான் பெருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட சில அமைப்புகள் நேற்று பெருநாள் கொண்டாடி இருந்தாலும், தலைமை காஜி அறிவிப்பின்படி பெரும்பான்மை மக்கள் இன்று பெருநாளை கொண்டாடி வருகின்றனர். காலையிலேயே பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்களின் சிறப்பு கூட்டுத் தொழுகை பிரார்த்தனை மேற்கொண்டனர்.
கோவையில் போத்தனூர், உக்கடம், கோட்டைமேடு என பல பகுதிகளில் மக்களுக்கு வழங்குவதற்காக பிரியாணி தயார் செய்யும் ஏற்பாடுகள் அதிகாலையே தொடங்கி ஜரூராக நடந்து வருகிறது. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, கேசரி, அல்வா என பலவகை உணவுகளும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தயார் செய்யப்பட்டு வருவதாக இஸ்லாமிய மக்கள் தெரிவித்துள்ளனர். பிரியாணிக்காக காலையிலிருந்தே மக்கள் பலரும் அப்பகுதியில் காத்துள்ளனர்.
Edit by Prasanth.K