1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 21 ஜனவரி 2023 (09:15 IST)

பிளவுபட்ட அதிமுகவாக போட்டி? ஓபிஎஸ் தேர்தல் நிலைபாடு இதுதான்!

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் குறித்த தனது நிலைபாட்டை அறிவித்தார் ஓ.பன்னீர் செல்வம்.


ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக, திமுக உள்பட அரசியல் கட்சிகள் அனைத்தும் சுறுசுறுப்பாகியுள்ளன என்பதை ஏற்கனவே பார்த்தோம். திமுக தரப்பில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

அதே சமயம் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும் பாஜகவுக்கு அந்த தொகுதியை அளிக்க அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி குறித்த முக்கிய முடிவு இன்று எடுக்கப்படும் என்று கூறியிருந்த ஓ.பன்னீர் செல்வம் சற்று முன் தேர்தல் குறித்த தனது நிலைபாட்டை அறிவித்தார். இது குறித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிட உள்ளோம். தேர்தலில் பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் முழு ஆதரவு அளிப்போம். பிளவுபட்ட அதிமுக அணியாக  தேர்தலை சந்திக்க எங்களுக்கு விருப்பம் இல்லை.

அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். ஒன்றிணைவது குறித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளோம். தேவைப்பட்டால் சசிகலாவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம் என  தெரிவித்துள்ளார்.