திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Updated : திங்கள், 17 ஜூன் 2024 (18:08 IST)

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தில் உள்ள வீரமுத்து ரேவதி ஆகியோரின் இரண்டாவது மகள் சங்கீதா. இவர் குழந்தைப் பிறப்புக்காக தன்னுடைய தாய் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார். அவருக்கு கடந்த சித்திரை மாதம் ஆண்குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை சங்கீதா எழுந்த போது அவரின அருகில் இருந்த குழந்தையைக் காணவில்லை. இதையடுத்து பதற்றமான குடும்பத்தினர் குழந்தையைத் தேடிய போது வீட்டின் குளியலறையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை இறந்த நிலையில் கிடந்துள்ளது.

வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் வெளியாட்கள் யாரும் வந்து குழந்தையை கொன்றிருக்க முடியாது என யூகித்த போலீஸார் குழந்தையின் தாத்தா வீரமுத்து, பாட்டி ரேவதி மற்றும் பெரியம்மா அனுசுயா ஆகியோரை அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.

மூன்று நாட்கள் நடந்த விசாரணையில் தாத்தா வீரமுத்துதான் குழந்தையை போர்வையில் சுருட்டி தண்ணீர் தொட்டிக்குள் போட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. குழந்தை சித்திரை மாதத்தில் பிறந்ததால் தன் உயிருக்கு ஆபத்து மற்றும் குடும்பத்தில் கடன் தொல்லை அதிகமாகும் என்ற மூடநம்பிக்கைக் காரணமாக அவர் இப்படி செய்தது தெரியவந்துள்ளது. பிறந்து 38 நாட்களே ஆன பச்சைக்குழந்தையை தாத்தாவே கொலை செய்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.