1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 11 ஏப்ரல் 2024 (11:10 IST)

குழந்தைகளை காப்பாற்ற பாம்பிடம் சண்டை போட்டு இறந்த வீர நாய்! – அரியலூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

Cobra
அரியலூரில் வீட்டிற்குள் நுழைந்த பாம்பிடம் சண்டையிட்டு குழந்தைகளை காப்பாற்றி நாய் உயிரை விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



பாசம் காட்டிவிட்டால் நன்றியோடு இருக்கும் ஜீவன் நாய். அந்த பாசத்திற்காக நாய் ஒன்று உயிரையே விட்ட சம்பவம் அரியலூரில் நடந்துள்ளது. அரியலூரில் உள்ள கழுவன்தொண்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வேந்திரன். இவரும், இவரது மனைவி சாந்தியும், 2 மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகள் சகிதம் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த வீட்டில் கடந்த 11 ஆண்டுகளாக ஹெண்ட்ரி என்று ஒரு நாயையும் வளர்த்து வந்துள்ளனர். குடும்பத்தினரிடம் மிகவும் பாசமாக ஹெண்ட்ரி இருந்து வந்துள்ளது. சமீபத்தில் வீட்டு பெரியவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் குழந்தைகள் வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் இருந்த தோப்பு வழியாக விஷப்பாம்பு ஒன்று வீட்டுக்குள் நுழைந்துள்ளது.


அதை பார்த்த ஹெண்ட்ரி உடனே குரைத்து குழந்தைகளை எச்சரித்ததுடன், காலால் அவர்களை வீட்டிற்குள் தள்ளியுள்ளது. பின்னர் அங்கு வந்த பாம்புடன் சண்டையிட தொடங்கியுள்ளது. இதில் பாம்பு ஹெண்ட்ரியை பல இடங்களில் கடித்துள்ளது. எனினும் ஹெண்ட்ரி அந்த பாம்பை கடித்து குதறி கொன்றதுடன், அதன் விஷம் தாக்கியதால் தானும் மயங்கி விழுந்து பரிதாபமாக பலியானது.

வீட்டிற்கு வந்த பெரியவகளிடம் குழந்தைகள் விஷயத்தை கூறவும் அதிர்ச்சியடைந்த அவர்கள் ஹெண்ட்ரியை கால்நடை மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அது ஏற்கனவே உயிரிழந்துவிட்டிருந்தது. தனது குழந்தைகளை காப்பாற்ற உயிரை விட்ட ஹெண்ட்ரிக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டி, பொதுமக்கள் முன்னிலையில் ஹெண்ட்ரிக்கு இறுதி சடங்குகளை அந்த குடும்பத்தினர் செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K