அரியலூர் செந்துறையில் சிறுத்தை நடமாட்டம்.. உறுதி செய்தது வனத்துறை..!
மயிலாடுதுறை அருகே சிறுத்தை நடமாட்டம் காரணமாக அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள் என்பதும் அந்த பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வனத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் போக்கு காட்டி வரும் சிறுத்தையை பிடிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டு சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வனத்துறையினர் அரியலூர் செந்துறையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
இதனை அடுத்து அந்த பகுதியில் வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மயிலாடுதுறையில் இருந்து அரியலூருக்கு சிறுத்தை இடம் பெயர்ந்து உள்ளதாகவும் சிறுத்தையை உடனடியாக பிடிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறையில் இருந்து அரியலூருக்கு சிறுத்தை சென்று விட்டது என்பதை அறிந்து மயிலாடுதுறை மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் தற்போது அரியலூர் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர் என்பதும் விரைவில் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran