யானைக்கு குறி வைத்த தினகரனால்,ஓணானை கூட பிடிக்க முடியவில்லை: ஜெயகுமார் கேலி
அமமுக சட்சியின் தலைவர் டி.டி.வி. தினகரன் தன்னை ’ரிங்’ மாஸ்டர் என்று நினைத்துகொண்டு ”பில்டப்” கொடுத்துக் கொண்டிருக்கிறார் என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
அமமுக கட்சியிலிருந்து விலக்கப்பட்ட தங்க தமிழ்செல்வன், அதிமுக வில் இணைய போவதாக பல செய்திகள் வெளியாகின. எனினும் அதிமுக வில் இணைவது யாராக இருந்தாலும், அவர்களுக்கு முட்டுகட்டை போடமுடியாது என ஜெயகுமார் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் நிருபர்களிடம், டி.டி.வி.தினகரன் தன்னை ரிங் மாஸ்டர் என்று நினைத்து கொண்டு யானையை பிடிக்க நினைத்தார் என்றும், ஆனால் அவரால் ஒரு ஓணானை கூட பிடிக்க முடியவில்லை என்றும் கூறினார்.
அமமுக கட்சியிலிருந்து விலக்கப்படுவதற்கு முன்னமே தங்க தமிழ்ச்செல்வன் அதிமுக, திமுக ஆகிய கட்சி நபர்களை ரகசியமாக சந்தித்து வருகிறார் என்று சில செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் அதிமுக-வில் தங்க தமிழ்ச்செல்வன் இணைவதற்கு பல இடங்களில் எதிர்ப்பு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டன. இது குறித்து நிருபர்கள் ஜெயகுமாரிடம் கேள்வி எழுப்பியபோது, உணர்வு அடிப்படையில் தொண்டர்கள் அவ்வாறு ஒட்டியிருக்கலாம் என்றும், தங்க தமிழ்ச்செல்வன் அதிமுக-வில் இணைவது குறித்து கட்சி தலைமை தான் முடிவெடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அரசியலில் நிரந்திர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை எனவும், சூழ்நிலைக்கேற்ப சில நேரங்களில் எதிர்பாரத விஷயங்கள் நடக்கும் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.