கரூர் எஸ்பியை சுட்டுக் கொலை செய்ய முயன்ற நபர் கைது
கரூர் எஸ்பியை சுட்டுக் கொலை செய்ய முயன்ற நபர் கைது
கரூர் எஸ்பி வந்திதா பாண்டேவை சுட்டுக் கொலை செய்ய முயன்ற நபரை தூப்பாக்கியுடன் போலீசார் கைது செய்தனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தது.
இந்த நிலையில், கரூர் மாவட்டம், அய்யம்பாளையத்தில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பினாமிகளில் ஒருவரான அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு சொந்தமான குடோன் மற்றும் வீட்டில், கடந்த, 22 ஆம் தேதி, கணக்கில் வராத ரூ. 4.87 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், பணம் எண்ணும் கருவி, அம்புலன்ஸ் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த ரெய்டை முன்னின்று நடத்தியவர் கரூர் எஸ்.பி. வந்திதா பாண்டே ஆவார். இந்த நிலையில், கரூர் எஸ்.பி. வந்திதா பாண்டேவை கொலை செய்ய முயற்சி செய்து கொண்டதாக வதந்தீ பரவி வருகிறது.
ஆனால், தான் நலமாக உள்ளதாக கரூர் எஸ்பி தெரிவித்துள்ளார். வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், கரூர் எஸ்.பி. வந்திதா பாண்டேவை கொலை செய்யும் நோக்கத்துடன் பரமத்தியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற நபர் துப்பாக்கியுடன் எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவரை போலீசார் மடக்கி செக்அப் செய்த போது, அவரிடம் துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது.
மேலும், போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி போது, கரூர் எஸ்பியை சுட்டுக் கொலை செய்தால் ரூ 10 லட்சம் தருவதாக சிலர் சொன்னதாக கூறியுள்ளார். இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.