பார்த்து செய்யுங்கள்! - தேர்தல் ஆணையத்திடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
பறக்கும் படையினர் வியாபாரிகள் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் வியாபாரிகள் என்பது உறுதியாகி விட்டால் அவர்கள் சொற்ப அளவில் எடுத்துச் செல்லும் பணத்தை பறிமுதல் செய்யும்போது கவனமாக செயல்பட வேண்டும் என்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகளால் மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று வணிகர் சங்கங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.
வியாபாரிகள் பொருட்களை வாங்க எடுத்துச் செல்லும் பணத்தை ஆங்காங்கே பறிமுதல் செய்து விடுவதால் வர்த்தகமே நடத்த முடியாத சூழல் ஏற்படுகிறது என்றும், இதுவரை 30 சதவீதத்திற்கு மேல் மொத்த வியாபாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் வணிகர் சங்கங்கள் முறையிட்டுள்ளன. சுமார் 1,200 கோடி ரூபாய் வரை வர்த்தகம் தினமும் பாதிப்பட்டு வருவதாகவும் கூறியிருக்கிறார்கள்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் ஆளுங்கட்சியின் நடவடிக்கை முறியடிக்கப் பட வேண்டியதுதான் என்பதில் சந்தேகமில்லை. அதற்காக தேர்தல் ஆணையம் தொடர்ந்து நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும், ஆளுங்கட்சியினர் ஆங்காங்கே தொகுதிகளில் பதுக்கி வைத்துள்ள பணங்களைக் கூட பறக்கும் படை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அதே நேரத்தில் தேர்தல் ஆணையம் வியாபாரிகள் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்படுமாறு பறக்கும் படை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அனைத்து வியாபாரிகளுமே வங்கியிலிருந்து பணம் எடுத்துச் செல்ல முடியாது. சில வியாபாரிகள் கடன் வாங்கிக் கூட வியாபாரம் செய்வார்கள். அது போன்ற வியாபாரிகள் சிறிய அளவில் பணத்தை வியாபாரப் பொருட்களை வாங்க எடுத்துச் செல்லும் போது அதையும் பறிமுதல் செய்து மூன்று தினங்கள், நான்கு தினங்கள் வைத்துக் கொண்டால் அந்த வியாபாரியின் குடும்பமே பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும் ஆபத்து இருக்கிறது.
வியாபாரிகள் என்பது உறுதியாகி விட்டால் அவர்கள் சொற்ப அளவில் எடுத்துச் செல்லும் பணத்தை பறிமுதல் செய்யும் போது பறக்கும் படையினர் கவனமாக செயல்பட வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். குறிப்பாக அவர்கள் வைத்துள்ள பணம் உரிய ஆவணங்களுடன் இருந்தால் அந்தப் பணத்தை உடனே அந்த இடத்திலேயே திருப்பிக் கொடுத்து விட்டுச் செல்லுமாறு பறக்கும் படை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
முடிந்த வரைக்கும் வியாபாரிகளை பாதிக்கும் வகையில் இந்த பறக்கும் படையின் செயல்பாடுகள் இருக்காதவாறு தேர்தல் ஆணையம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இந்த முறை தேர்தல் கால அவகாசம் அதிகமாக இருப்பதால், இந்த காலகட்டம் முழுவதும் வியாபாரிகளுக்கு இப்படியொரு தொல்லை நேர்ந்தால் அவர்களது வியாபாரம் மட்டுமின்றி, தமிழகத்தில் ஒட்டுமொத்த வர்த்தகமே மோசமாக பாதிக்கப்படும்.
ஆகவே வியாபாரிகள் பணம் பறிமுதல் விஷயத்தில் தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கி, வியாபாரிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் அதே நேரத்தில் வியாபாரிகளுக்கு சலுகை வழங்குகிறோம் என்று கூறி பறக்கும் படை அதிகாரிகள் ஆளுங்கட்சியினர் எடுத்துச் செல்லும் பணத்தை கண்டு கொள்ளலாமல் இருந்துவிடக்கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
வியாபாரிகளின் பணம் பறிமுதல் பிரச்சினை தொடர்பாக அவர்கள் முன் வைக்கும் கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.