வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2024 (13:03 IST)

பொறுப்பற்ற அநாகரிகமான செயல்: அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்து ஆதவ் அர்ஜூனா

அண்ணா பல்கலை சம்பவம் குறித்து பேசும் உயர்கல்வித்துறை அமைச்சர் இந்த குற்றத்தைப் பொள்ளாச்சி சம்பவத்தோடு ஒப்பிட்டு  அரசியல் கணக்குப் போடுவது மிகவும் பொறுப்பற்ற அநாகரிகமான செயலாகும் என்று ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
இந்தியாவில் புகழ்பெற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் துயரையும் அளிக்கிறது. சென்னையின் தலைசிறந்த பல்கலைக்கழகமும் பெண்கள் அதிகம் படிக்கும் கல்வி நிலையமுமான அங்கு முறையான பாதுகாப்பு இல்லாதது, சிசிடிவி சரியாக வேலை செய்யவில்லை போன்ற கருத்துக்கள் கவலைக்குரியதாக உள்ளது. நடந்த விசயத்தை சில குறுகிய நோக்கங்களுக்காக மூடி மறைப்பதை விட்டுவிட்டு நடக்கும் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
 
'பெண் கல்வியே சமூக முன்னேற்றத்தின் அடையாளம்' என்ற நிலையில் பெண்கள் அதிகம் கல்வியில் வளர்ச்சியடைந்து வரும்போது, கல்வி நிலையத்திலேயே மாணவி மீது வன்முறை என்பது தனிப்பட்ட பிரச்சனை அல்ல. அது பெண் கல்வியையே அச்சுறுத்தும் போக்காக உள்ளது. பெண்கள் கல்விப் படிகளைத் தடுக்கும் விதமாக எச்சரிக்கை விடுக்கும்  எந்தவொரு இடையூறுகளுக்கும் அரசு எதிர்காலத்தில் இடம் கொடுத்துவிடக் கூடாது. கொல்கத்தா அரசு பயிற்சி மருத்துவருக்கு நேர்ந்த கொடுமையும், அதையொட்டி அங்கு உருவான பதற்றமான சூழல் போன்ற எந்தவித பின்னடைவுகளுக்கும் தமிழ்நாடு சந்திக்காத வகையில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
 
பெண்கள் பாதுகாப்புக்கான வழிமுறைகள், கல்வி நிலையங்கள் உட்பட பொது இடங்களில் அவர்களுக்கான அனைத்து பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது, அனைத்து கல்லூரிகளிலும் சிசிடிவி கேமரா பொறுத்தி அதனை முறையாகப் பயன்படுத்துவது,மாணவிகளுக்கு எச்சரிக்கையான அணுகுமுறைகளைச் சொல்லிக் கொடுப்பது, அரசின் 'காவலன் ஆப்' போன்ற பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை அனைத்து பெண்களிடமும் கொண்டு சேர்ப்பது, அதன் பயன்பாட்டு நிலை என்ன என்று தொடர்ந்து கண்காணிப்பது ஆகியவற்றை அரசு முதன்மையாக மேற்கொள்ள வேண்டும். பெண்கள் பயிலக்கூடிய பள்ளி, கல்லூரிகளில் முழுமையான சிசிடிவி பாதுகாப்பை செய்வது அவசியமாகும்.
 
இந்த சம்பவத்தில் கைதான நபரின் குற்றப் பின்புலத்தைப் பார்க்கும்போது இது தனிநபர்களால் நிகழ்த்தப்பட்டதா அல்லது பின்னணியில் செல்வாக்குமிக்க நபர்களின் தலையீடு ஏதும் உள்ளதா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுகிறது. குறிப்பாக குற்றவாளியான நபர் பல முக்கிய பிரமுகர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த முக்கிய நபர்கள் இதுகுறித்து தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டும்.அரசு பெண் ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைத்து நேர்மையான, வெளிப்படையான விசாரணையை மேற்கொண்டால் மட்டுமே பாதிக்கப்பட்டவரால் தயக்கமின்றி உண்மையை கூற வாய்ப்பாக அமையும். மேலும்,இதுபோன்று வேறு பெண்கள் ஏதேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பதையும் விசாரிக்க  வேண்டும்.
 
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசும் உயர்கல்வித்துறை அமைச்சர் இந்த குற்றத்தைப் பொள்ளாச்சி சம்பவத்தோடு ஒப்பிட்டு  அரசியல் கணக்குப் போடுவது மிகவும் பொறுப்பற்ற அநாகரிகமான செயலாகும். இதுபோன்ற ஒப்பிட்டு அரசியல் பேசி, பேசியே சமூகம் தொடரந்து சீரழிவுக்கு உள்ளாகி வருகிறது . இனியும் ஒப்பீட்டு அரசியலை பேசாமல் இதுபோன்ற விவகாரங்களில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக நிலைமையைத் தவிர்த்து அரசியல் விளையாட்டை இதுபோன்ற விவகாரங்களில் மேற்கொள்வது அரசியல் நாகரீகத்திற்கு ஒப்பற்றது.
 
பெண்கல்வி, சக மனிதர்கள் மீதான அன்பு, பாலியல் நெறிகள், முறையான பாதுகாப்பு போன்றவற்றைக் கொண்ட வளமான சமூகமாகத் தமிழ்நாட்டை உறுதிப்படுத்துவது அரசு உட்படப் பொறுப்புள்ள அனைத்து குடிமக்களின் கடமையாகும்.
 
 
 
Edited by Mahendran