அரசாணை இல்லை ; ஜல்லிக்கட்டு சட்டவிரோதம் - உயர் நீதிமன்ற கருத்தால் அதிர்ச்சி
அரசாணை இல்லாத நிலையில் மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை சட்ட விரோதமாக கருதலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு இளைஞர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தால், அவசர சட்டம் இயற்றப்பட்டு, ஜல்லிக்கட்டின் மீதான தடை நீக்கப்பட்டது. எனினும் கடந்த ஆண்டு சற்று கால தாமதம் ஆகியே ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
ஆனால் இந்த ஆண்டு எல்லா முன்னேற்பாடுகளும் முன்னரே செய்யப்பட்டு, கடந்த 14ம் தேதியான பொங்கலன்று அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கலான 15ம் தேதியன்று பாலமேட்டிலும் கோலாகலமாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மதுரை மாவட்ட கலெக்டர், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். அதேபோல், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கடந்த 15ம் தேதி 1,050 காளைகள், 1,241 வீரர்களுடன் கோலாகலமாகத் தொடங்கியது. அந்த போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி “2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த மட்டுமே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு எந்த அரசாணையும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை சட்டவிரோதம் என கருத முடியும்” என கருத்து தெரிவித்தார்.
தமிழகத்தில் இனிமேல் ஜல்லிக்கட்டு நடத்த எந்த பிரச்சனையும் இல்லை என நினைத்திருக்கும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு, இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.