விரைவில் சதமடிக்க இருக்கும் சென்னை விமான நிலையம் !- எதில் தெரியுமா?
சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை கண்ணாடி விழுந்துள்ளது பயணிகள் மத்தியில் மீண்டும் பீதியைக் கிளப்பியுள்ளது.
சென்னையில் உள்ள விமானநிலையம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்களைக் கொண்டுள்ளது. இது சமீபத்தில் 2200 கோடி ரூபாயில் நவீன மயமாக்கப்பட்டது. இதனால் மேற்கூரைகளிலும் பக்கசுவர்களிலும் கண்ணாடிகள் அமைக்கப்பட்டு பார்ப்பவர்கள் கண்ணைப் பறித்தது.
ஆனால் இந்த் கண்ணாடிகளால் வேறு சில பிரச்ச்னைகள் உண்டாக ஆரம்பித்தன. அடிக்கடி மேற்கூரைகளில் இருந்து கண்ணாடிகள் உடைந்து விழ ஆரம்பித்தன. இதனால் பயணிகள் மத்தியில் பீதி எழுந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் இதுபோன்ற சம்பவம் ஒன்று மீண்டும் நடந்துள்ளது. உள் நாட்டு முனையம் புறப்பாடு பகுதி 3-வது நுழைவு வாயிலின் மேல்பகுதியில் இருந்த கண்ணாடி திடீரென்று பெயர்ந்து கீழே விழுந்து உடைந்தது. அந்த இடத்தில் பயணிகள் உட்பட யாரும் இல்லாததால், அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. 83-வது முறையாக இந்த விபத்து நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. விரைவில் இந்த எண்ணிக்கை 100 –ஐத் தொடும் என சமூக வலைதளங்களில் கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இதுவரை இதுபோல நடந்த அசம்பாவிதங்களால் 14 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.