இரட்டை இலை சின்னம் ; இன்று இறுதி விசாரணை : எடப்பாடி அணிக்கு கிடைக்குமா?
அதிமுகவின் சின்னமான இரட்டை இலை எந்த அணிக்கு சொந்தம் என்பது தொடர்பான இறுதி விசாரனை இன்று தேர்தல் ஆணையத்தில் நடைபெறுகிறது.
எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் ஆகிய அணிகள் ஒன்றிணைந்து, பொதுக்குழுவை நடத்தி, அதன் தீர்மானங்களை தேர்தல் கமிஷனில் சமர்பித்து, பெருவாரியான நிர்வாகிகள் தங்கள் பக்கமே இருப்பதால் இரட்டை இலை சின்னத்தை வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர். ஆனால், இந்த விவகாரத்தில் தங்களை கேட்காமல் முடிவெடுக்கக் கூடாது என தினகரன் தரப்பிலும் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் அது தொடர்பான விசாரணை கடந்த 6ம் தேதி டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது. அப்போது, எடப்பாடி மற்றும் தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
அப்போது, கூடுதம் ஆவணங்களை தாக்கல் செய்ய தினகரன் தரப்பிற்கு ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை கடந்த 13ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், அந்த விசாரணை 16ம் தேதியே நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த 16ம் தேதி நடைபெற்றது. அதன் பின் அந்த வழக்கு 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. எனவே, இன்று நடைபெறும் இறுதி விசாரணைக்கு பின் இரட்டை இலை யாருக்கு சொந்தம் என தேர்தல் கமிஷன் அறிவிக்கும் எனத் தெரிகிறது.
உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் படி, அதிமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் யார் பக்கம் உள்ளனரோ அவர்களுக்கே சின்னம் ஒதுக்கப்பட வேண்டும். அந்த வகையில், அதிகம் பேரின் ஆதரவு எடப்பாடி அணிக்கே இருக்கிறது. எனவே, எடப்பாடி- ஓ.பி.எஸ் அணிக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க நவம்பர் 10ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.