தமிழக அரசு பேருந்து டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..
காரைக்குடியிலிருந்து கொடைக்கானல் நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து, திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே சென்றபோது பெரும் விபத்திலிருந்து தப்பியது. ஓட்டுநர் இருக்கைக்குக் கீழே இருந்த முன்பக்க டயர் திடீரென வெடித்து, தனியாக கழன்று ஓடியதால் பேருந்து கட்டுப்பாட்டை இழக்க தொடங்கியது.
பயணிகள் பீதியடைந்து கூச்சலிட்ட நிலையில், ஓட்டுநர் பதற்றமடையாமல் பேருந்தை சாமர்த்தியமாகக் கட்டுப்படுத்தி சுமார் 10 மீட்டர் தொலைவில் பாதுகாப்பாக நிறுத்தினார். இதனால் பயணிகள் அனைவரும் எவ்வித காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் மாற்றுப் பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொடைக்கானல் போன்ற மலைப்பாதைகளில் செல்லும் பேருந்துகளில் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டால் அது பெரும் உயிரிழப்புகளை உண்டாக்கும். எனவே, அரசு பேருந்துகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் எனப் பயணிகள் போக்குவரத்துத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஓட்டுநரின் சாமர்த்தியமான செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Edited by Mahendran