செவ்வாய், 20 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 19 அக்டோபர் 2017 (15:49 IST)

அதிமுக 46வது தொடக்க விழா ; எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த தினகரன்

அதிமுக 46வது தொடக்க விழா ; எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த தினகரன்
அதிமுகவின் 46வது தொடக்கவிழா, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் வாழ்ந்து வந்த ராமாவரம் தோடத்தில் கொண்டாப்படும் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.


 

 
அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்த பின், டிடிவி தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு 18 எம்.எல்.ஏக்கள் மற்றும் சில எம்.பி.க்களின் ஆதரவு இருக்கிறது. 
 
அதிமுகவை தொடங்கிய தினமான 1972ம் ஆண்டு 17ம் தேதியை அதிமுகவினர் வருடம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். பெரும்பாலும், சென்னை ராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த விழா நடக்கும். 
 
இந்நிலையில், அதிமுகவின் 46வது ஆண்டு தொடக்க விழா வருகிற 24ம் தேதி, ராமாவரம் தோட்டத்தின் நுழைவு வாயிலில் நடைபெறும் என தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
அன்று அந்த இடத்தில் கழகக் கொடியை ஏற்றும் தினகரன், எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து, 46வது ஆண்டு தொடக்க நாள் விழா சிறப்பு மலரை வெளியிடுகிறார். மேலும், அந்த தோட்டத்தில் அமைந்துள்ள காது கேளாதோர் இல்லத்தில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உணவும், சீருடையும் வழங்கப்படும் எனவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், துரோகக் கும்பலை, சுயநலக் கூட்டத்தை சட்ட ரீதியாகவே தலைமை கழகத்தில் இருந்து வெளியேற்றிக் காட்டுவோம். ‘துரோகம்’ என்கிற தற்போதைய களங்கத்தைத் துடைத்தெறிந்துவிட்டு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கழகத்தின் துவக்க விழாவை “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்” என்கிற நமது அடையாளத்தோடு, நம் தலைமைக் கழகத்தில் எழுச்சியோடு கொண்டாடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அதிமுகவின் 46வது ஆண்டு தொடக்க விழா பற்றி, முதல்வர் எடப்பாடி தரப்பில் எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகாத நிலையில், டிடிவி தினகரனின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.