நான் ஒரிஜினலாவே விவசாயிங்க! – கிசான் பணத்தை எடுத்த அதிகாரிகள்!
கரூரில் கிசான் திட்டத்தில் மோசடியாக கணக்கு தொடங்கியவர்களிடமிருந்து பணத்தை திரும்ப பெற்றபோது விவசாயி ஒருவரிடமும் பணம் எடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் விவசாயம் செய்யாமலே விவசாயி என காட்டி பணம் பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை சிபிஐடி விசாரிக்க உள்ள நிலையில் மாவட்டம் தோறும் போலி கணக்குகளை கண்டறிந்து பணத்தை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரூர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில்78,517 பேர் பதிவு செய்துள்ள நிலையில் அதில் 1,908 பேர் போலியாக பதிவு செய்தவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்றபோது நரசிங்கபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் என்ற விவசாயியின் கணக்கிலிருந்தும் பணம் எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகளிடம் முறையிட்ட ஆறுமுகம் தான் உண்மையாகவே விவசாயிதான் என முறையிட்டுள்ளார். அவரது ஆதார் மற்றும் விவசாய அடையாள அட்டை ஆகியவற்றை சமர்பிக்குமாறு அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் தான் ஏற்கனவே இந்த சான்றுகளை அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். போலி கணக்குகளிடம் இருந்து பணம் எடுக்கப்படும்போது உண்மையான விவசாயிகளும் பாதிக்கப்படுவது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.