கன்னிமாரா நுாலகத்தை, 'கொன்னமர நுாலகம்' என மொழி பெயர்த்த கூகுள்: தமிழ் ஆர்வலர்கள் கண்டனம்..!
கன்னிமாரா நூலகத்தை 'கொன்னமர நூலகம்" என தவறாக கூகுள் மொழிபெயர்ப்பு மூலம் மொழிபெயர்த்துள்ளதாக, தமிழ் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசுக்கு சொந்தமான சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகம் உலகப் புகழ்பெற்றது. இந்த நூலகத்தில் உள்ள சில வரிகள் மொழிபெயர்த்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவை கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் தவறாக மொழிபெயர்க்கப்பட்ட உள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள சிற்ப கூடத்தில் வைக்கப்பட்டுள்ள குறிப்புகளை பார்க்கும்போது, தலைசுற்றும் அளவுக்கு ஆங்கிலத்தில் உள்ள குறிப்புகளுக்கு தகுந்தபடி தமிழில் மொழி பெயர்க்காமல், கூகுள் மொழிபெயர்ப்பின் அடிப்படையில் தவறாக மொழி பெயர்த்து அச்சடித்து வைத்துள்ளதாகவும், எந்த வாக்கியமும் முழுமையாக இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
தமிழ் ஆர்வலர்கள் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், பொதுமக்கள் புரிந்து கொள்வது கடினமாக உள்ள வார்த்தைகளை எளிய தமிழில் தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, "கன்னிமாரா நூலகம்" என்பதனை 'கொன்னமர நூலகம்" என்றும், 'ரிச் ரிப்போசிட்டரி' என்பதனை "பணக்கார களஞ்சியம்" என்றும் தவறாக மொழிபெயர்த்துள்ளது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
Edited by Siva