மதுசூதனனின் ஒப்புதலின் பேரில் ஜெ.வின் கைரேகை ஏற்கப்பட்டது - முதன்மை செயலாளர் விளக்கம்
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்து வழக்கில், தேர்தல் ஆணைய முதன்மைச் செயலர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த வரும் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் தோல்வியடைந்தார். அந்நிலையில், தேர்தல் ஆணைய படிவத்தில், ஏ.கே.போஸிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி ஜெ.வின் இடதுகை பெருவிரலில் கை ரேகை வைக்கப்பட்டிருந்தது.
எனவே, சுயநினைவோடுதான் ஜெயலலிதா அதில் கைரேகை வைத்தாரா என்பதில் சந்தேகம் எழுப்பிய சரவணன், ஏ.கே.போஸின் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எனவே, இதுகுறித்து தேர்தல் ஆணைய செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதன் விளைவாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய செயலாளர் வில்ஃபிரட் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அளித்த ஒப்புதலின் பேரில் ஜெ.வின் கைரேகை ஏற்கப்பட்டது. அவரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டது. ஆனால், கைரேகை படிவத்தில் ஜெ.வின் உடல் நிலை குறித்த அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என அவில்ஃபிரட் விளக்கம் அளித்தார்.
அதைத்தொடர்ந்து, அக்.27ம் தேதி மருத்துவர் பாலாஜி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.