1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 10 மார்ச் 2024 (10:30 IST)

தமிழகத்தில் 2 வது நாளாக தொடரும் ED சோதனை.! முக்கிய ஆவணங்கள் பறிமுதல் என தகவல்.!!

Aadhav Arjun
விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் வீட்டில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.
 
தமிழகத்தில் கடந்த 2022ம் ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் சிறப்புத் தொகுப்பு பொருட்கள் தரமின்றி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான அருணாசலம் இம்பேக்ஸ் நிறுவனம் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.
 
சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாகத்துறை விசாரணை மேற்கொண்டது.  அதன் தொடர்ச்சியாக நேற்று அமலாக்கத்துறையினர் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். 
 
அருணாசலம் இம்பேக்ஸ் நிறுவன உரிமையாளர் செல்வராஜ், கட்டுமான தொழிலதிபர் மகாவீர் ஈரானி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
 
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் ஆதவ் அர்ஜுனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. லாட்டரி அதிபர் மார்டினின் மருமகனான அர்ஜுனின் ஆழ்வார்பேட்டை வீடு, போயஸ் கார்டன் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 


இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் வீட்டில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.