மதுரை வரை புரெவி புயலின் தாக்கம் !!
வங்கக்கடலில் உருவாகும் புரெவி புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த வாரம் கரையை கடந்த நிலையில், மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வங்க கடலின் தென் கிழக்கில் இலங்கைக்கு அப்பால் உருவாகிய இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ளது.
இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்றே புயலாக வலு பெறும் என்றும், டிசம்பர் 2 ஆம் தேதி மாலை அல்லது இரவு நேரத்தில் புயலாக இலங்கையின் திரிகோணமலை அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கக்கடலில் உருவாகும் புரெவி புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என்பதால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் கரை திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.