வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 3 பிப்ரவரி 2018 (04:49 IST)

போக்குவரத்து போலீசார் சட்டையில் கேமிரா! இனி லஞ்சம் வாங்க முடியாதா?

லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாதவர்கள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்கள் ஆகியோர்களிடம் போக்குவரத்து போலீசார் லஞ்சம் பெறுவதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மேலும் சில வாகன ஓட்டிகளும் போலீசாரிடம் அத்துமீறி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே வேறுபாடுகளை களைந்து நல்லிணக்கத்தை மேம்படுத்த போக்குவரத்து போலீசார் சட்டையில் கேமிரா பொருத்தப்படுகிறது.

இந்த கேமிரா சோதனை அடிப்படையில் தற்போது தேனாம்பேட்டை, மெரினா, கோயம்பேடு மற்றும் பூக்கடை போக்குவரத்து காவல்நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் பதிவாகும் வீடியோ மூலம் போக்குவரத்து காவல் துறையினருக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த சோதனை முயற்சியில் வெற்றி கிடைத்தால் எதிர்காலத்தில் போக்குவரத்து போலீசார் அனைவருக்கும் கேமிரா பொருத்தப்பட்ட இதில் பதிவாகும் காட்சிகள்  போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே கண்காணிக்கப்படும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.