தமிழகம் முழுவதும் ஜில் ஜில் வானிலை – என்ன சொல்கிறது வானிலை ஆய்வு மையம் ?
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பகலில் குளிர்ந்த காற்று மற்றும் இரவுகளில் குளிர் அதிகமாக இருந்து வருகிறது. இந்த வானிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர் நிலவி வருகிறது. சென்னைப் போன்ற தொழில் நகரங்களில் கூட குளிரின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இதற்கானக் காரணம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் என் செல்வக்குமார் சில நாட்களுக்கு முன்னர் விளக்கம் அளித்தார். ‘இலங்கை தரைப்பகுதியில் காற்றழுத்த சுழற்சி நீடித்தது. இதுமட்டுமில்லாமல் சோமாலியா அருகே கடல் பகுதியில் காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இது காஷ்மீ்ர் பகுதியில் நிலவி வரும் குளிர் அலையை ஈர்க்கிறது. இச்சுழற்சி வட இந்தியாவை கடந்து தமிழக கடலோரப்பகுதியைக் கடந்து பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா வழியாக சோமாலிய காற்றழுத்த சுழற்சியால் ஈர்க்கப்பட்டு பயனிக்கிறது. இதனால் தமிழகத்திற்கு சில நாட்களுக்கு குளிர் அதிகமாக இருக்கும்’ எனத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியான தகவலில் ’வடகிழக்குத் திசையில் இருந்து தொடர்ந்து தமிழகம் நோக்கி குளிர்ந்தக் காற்று வீசி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் குளிர் அதிகமாக இருக்கிறது. இது இன்னும் 10 நாட்களுக்கு நீடிக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக வானிலை அளவுகள் குறித்த புள்ளிவிவரங்களையும் வெளியிட்டுள்ளது. அதன்படி ‘மலைப் பகுதிகலில் குறைந்தபட்சமாக வால்பாறையில் 3.5 டிகிரி செல்சியஸ், உதகையில் 4.4 டிகிரி, குன்னூரில் 7.8 டிகிரி, கொடைக்கானலில் 8.3 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது. மேலும் சமவெளிப் பகுதியில் மிகக் குறைந்த அளவாக தருமபுரி மற்றும் கரூர் பரமத்தியில் 15 டிகிரி, வேலூர், திருத்தணி, நாமக்கல் ஆகிய இடங்களில் தலா 15.5 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது.’ என அறிவித்துள்ளது.