1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 17 ஜனவரி 2018 (13:31 IST)

அதிமுகவில் நிலவும் குழப்பத்திற்கு மத்திய அரசே காரணம்; தினகரனின் ஓபன் டாக்

எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி டிடிவி தினகரன் புதிய கட்சியை துவங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் இப்போதைக்கு புதிய கட்சி துவக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே தினகரன் ஆர்கே நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு அமோகமாக வெற்றிபெற்றார். அவரது வெற்றி பணம் கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி என பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தெரிவித்தனர். தினகரனின் வெற்றியால் எடப்பாடி அணி அதிர்ந்து போனது. தொடர்ந்து நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தினகரன் ஆதரவாளர்கள் பலரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினர். இதனையடுத்து தினகரன் தனி கட்சி ஒன்றை ஆரம்பிக்க போவதாகவும் தகவல்கள் பரவியது. 
குன்னூரில் செய்தியாளர்களை இன்று சந்தித்த டிடிவி தினகரன், நிர்வாகிகளிடம் கலந்து பேசிய பின்னரே புதிய கட்சி தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் இப்போதைக்கு புதிய கட்சி தொடங்கும் திட்டம் இல்லை என்றும், அவ்வாறு புதிய கட்சி தொடங்குவதாக இருந்தால் கண்டிப்பாக அனைவரிடமும் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார். மேலும் அதிமுக அம்மா என்ற பெயரை மீட்டெடுப்பதே தங்களது முதல் குறிக்கோள் என்று தெரிவித்தார். எங்கள் கட்சியை பலப்படுத்த அதிமுக அம்மா என்ற பெயரில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவிருக்கிறோம் என்று கூறினார்.
 
தொடர்ந்து பேசிய தினகரன் நாங்கள் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், அதிமுகவில் உள்ளவர்கள் எங்களோடு இணைவார்கள்.

தற்போது அதிமுகவில் நிலவும் குழப்பத்திற்கு மத்திய அரசே காரணம், அவர்கள் இழுக்கும் இழுப்பிற்கு அதிமுக அமைச்சர்கள் ஆடுகிறார்கள் என்றும் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது எங்களது ஸ்லீப்பர் செல்கள் வெளியேறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுப்பதே எனது லட்சியம் என தினகரன் தெரிவித்தார்.