'வக்ஃப் வாரிய கூட்டுக்குழுவில் நடந்தது என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ஆ ராசா விளக்கம்..!
வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா கூட்டுக்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் இதில் அமளி செய்ததாக ஆ ராசா உள்பட 10 எம்பிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்ததாவது:
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடர்பாக உள்ள ஒவ்வொரு விதிகளையும் கருத்தில் கொண்டு விவாதிக்க வேண்டும் என்று நாங்கள் முன்பே வலியுறுத்தியிருந்தோம். இதனைத் தொடர்ந்து, இன்று அவசரமாக ஒரு கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் இருந்த பணிகளைத் துறந்து, உடனடியாக விமானத்தில் வந்து, இன்று காலை அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதற்கு முன்பாக, நேற்று இரவு 11.40 மணிக்கு, சேர்மனிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், இன்று விவாதம் நடத்துவதில் விதிகள் வாரியாக பரிசீலனை செய்யப்படாது, அதற்கு பதிலாக ஜம்மு-காஷ்மீரில் இருந்து சில இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
கூட்டத்தின் தேதி, பொருளடக்கம் ஆகிய அனைத்தும் திடீரென்று மாற்றப்பட்டன. கூட்டத்தில் கலந்து கொண்டு, விதிகளின் அடிப்படையில் விவாதம் நடத்த வேண்டும் என்று நாம் கேட்டுக் கொண்டோம், ஆனால் அது நடைபெறவில்லை.
மேலும், ஜனவரி 26 ஆம் தேதி, அனைத்து உறுப்பினர்களும் தங்கள் தொகுதிகளில் குடியரசு தின விழாவில் பங்கேற்க வேண்டும், அதன்பின்னர் ஜனவரி 27 ஆம் தேதி புதிய கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மசோதாவை முடிவுக்கு கொண்டு வர ஏப்ரல் வரை கால அவகாசம் இருக்கும்போது, ஏன் இந்த அவசர கூட்டம்? என நாம் கேள்வி எழுப்பினோம்.
தில்லி தேர்தலுக்காக விரைவாக விவாதம் நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய திட்டமிடுகிறீர்களா? இது மதங்களுக்கிடையேயான பிளவை ஏற்படுத்தும் செயல் அல்லவா? என கேள்வி எழுப்பியோம். மேலும், தில்லி தேர்தலில் இந்து வாக்குகளை பெற இது செய்யப்படுகிறது என்று நாங்கள் எதிர்கட்சியாக வாதம் முன்வைத்தோம்.
இந்த விவாதத்தின் போது, உடனடியாக சேர்மனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதன் பிறகு, எதிர்க்கட்சி எம்.பி.க்களை உடனடியாக கூட்டத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக அவர் அறிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
Edited by Mahendran