வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜனவரி 2018 (19:01 IST)

தினகரனின் புதிய கட்சியில் சேர மாட்டேன்: தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி!

அதிமுகவில் தனி அணியாக செயல்பட்டுவந்த டிடிவி தினகரன் நாளை புதிய கட்சி குறித்து அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இரட்டை இலை சின்னத்தையும், அதிமுகவையும் இழந்தாலும் தனக்கான ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு பலம்பொருந்திய அதிமுக, திமுக கட்சிகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார் தினகரன்.
 
இந்த வெற்றி அளித்த ஊக்கத்தில் புதிய கட்சி குறித்த ஆலோசனையில் தினகரன் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வந்தன. இந்நிலையில் எம்ஜிஆர் பிறந்தநாளான நாளை தனது புதிய கட்சி குறித்த முடிவை அறிவிக்க உள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
 
இந்நிலையில் தினகரனின் புதிய கட்சி குறித்தும், அவரது கட்சியில் இணைவது குறித்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரும், தினகரனின் தீவிர ஆதரவாளருமான தங்க தமிழ்ச்செல்வன் பிரபல தமிழ் வார இதழின் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
 
அப்போது அவரிடம் தினகரன் ஆரம்பிக்க உள்ள புதிய கட்சியில் இணைந்து செயல்படுவீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்துள்ள தங்க தமிழ்ச்செல்வன், கட்சிக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள், கட்சி, சின்னம் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்றார்.
 
மேலும் தினகரனுக்கு நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு கொடுப்போம். அந்தக் கட்சியில் நாங்கள் எப்படி இணைந்து செயல்பட முடியும்? நாங்கள் எப்போதும் அதிமுகதான். தோழமைக் கட்சியாக எங்களை நினைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்றார் தங்க தமிழ்ச்செல்வன்.