வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (10:29 IST)

இங்கிலிஷ்ல.. ஹிந்தில சொல்லவா? நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டதால் ஆத்திரப்பட்ட எல்.முருகன்!

L Murugan
மாற்று கட்சியினர் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில், மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பதிலளிக்க முடியாமல் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டதை ஆங்கிலத்தில், ஹிந்தியில் சொல்லவா? என ஆத்திரப்பட்டார்.


 
கன்யாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல். ஏ., வாக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்தார்.

இதைதொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாநிலத்தின் முக்கிய கட்சிகளை சேர்ந்தோர் கோவையில்  இணையவுள்ள நிகழ்வு நடைபெறவுள்ளதாக பேட்டி அளித்திருந்தார்.

இன்றைய தினம் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி கோவை அவினாசி சாலை அண்ணா சிலை அருகிலுள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறவுள்ளதாக செய்தியாளர்களுக்கு மாநில துணை தலைவர் பெயரில் அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, கோவை விமான நிலையம் வந்த மாநில தலைவர் அண்ணாமலை மாலையில் செய்தியாளர்களை சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

5.30 மணிக்கு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், 7 மணி ஆகியும் தொடங்கப்படவில்லை. இதையடுத்து, பாஜக மகளீர் அணி தலைவி வானதி சீனிவாசன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக துணை தலைவர் ராமலிங்கம் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றனர்.

 
மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை.

அப்போது பேசிய மாநில துணை தலைவர் கே. பி. ராமலிங்கம் “முன்னணி தலைவர்கள் இணைவதாக அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்வு அடுத்த வாரம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாகவும், பிரதமர் வருகையை ஒட்டி பாதுகாப்பு காரணங்களால் தள்ளி வைக்கப்படுவதாகவும், அடுத்த வாரம் கூடுதலாகவே இணைவார்கள்” என்று கூறி விளக்கமளித்தார்.

இதன் பின் பேசிய மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பிரதமர் நாளை திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை பாராளுமன்ற தொகுதியில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்க உள்ளதாகவும், ஜூலை 28 தொடங்கப்பட்ட 234 தொகுதியிலும் நடந்த என் மண் என் மக்கள் யாத்திரை பிரதமரின் 10 ஆண்டு சாதனை, திமுகவின் தோல்வி, ஊழல்களை எடுத்து செல்லும் வகையில் நடந்த யாத்திரையின் இறுதி நிகழ்வு தமிழக அரசியலில் நடந்திராத யாத்திரையாக உள்ள நிகழ்சியில் பிரதமர் பங்கேற்பதாக கூறியவர், அடுத்த நாள் தூத்துக்குடியில் அரசு நிகழ்விலும், திருநெல்வேலியில் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், பிரதமரின் 2 நாட்கள் பயணம் தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றார்.

காசி, சவுராஷ்டிரா தமிழ் சங்கம் நடத்தப்பட்டது, திருக்குறள் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டது, ஐ.நா. சபையில் தமிழில் பேசிய பிரதமர், தமிழகத்திற்கு 11 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது, நாட்டிலேயே 2 இராணுவ வழித்தடங்களில் உத்தரப்பிரதேசம், தமிழகத்தில் கோவைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழருடைய ஆட்சி பெருமையை பறைசாற்றும் வகையில் செங்கோல் வைத்து புதிய நாடாளுமன்றம் திறந்து வைக்கப்பட்டது ஆகியவையை சுட்டிக்காட்டி தமிழகத்திற்கும், தமிழுக்கு மிகப்பெரிய பெருமையை பிரதமர் சேர்த்துள்ளாதாக பட்டியலிட்டவர், தமிழக மக்கள் சார்பில் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்பட உள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகள் தமிழகத்திற்கு பிரதமர் செய்த நல் திட்டங்களுக்கு நன்றி கூறும் வகையில் நாளை அமையவுள்ளதாக தெரிவித்தார்.

பிரதமர் வருகையால், இன்றைய தினம் கோவையில் மாற்று கட்சியினர் இணையவுள்ளவர்கள் பட்டியல் கொடுத்து திருப்பி வருவதற்கு ஏற்படும் கால தாமதம் காரணமாக இன்றைய நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து கட்சிகளில் இருந்து வர உள்ளதாகவும், எம்.எல். ஏ, வாக இருந்தவர் இணைந்துள்ளார் என விஜயதரணி இணைப்பை சுட்டிக்காட்டி, பிரதமர், ஆட்சி மீது நம்பிக்கை கொண்டு வர உள்ளதாக பேட்டி அளித்தார். தொடர்ந்து நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டத்து தொடர்பான செய்தியாளர்கள் தொடர்ச்சியாக எழுப்பிய கேள்விக்கு, ஆத்திரமடைந்த மத்திய அமைச்சர் எல் முருகன், நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டதை ஆங்கிலத்தில், ஹிந்தியில் சொல்லவா? என கோவமாக தெரிவித்தார். இதையடுத்து, இதே கேள்வியை கேட்க வேண்டாம் என செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற வானதி சீனிவாசன் கூறிய நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பை நிறைவு செய்தார் அமைச்சர் எல் முருகன்.