புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2019 (18:20 IST)

கூட்டணியை பிடித்த திமுக: ஆட்டத்தை இழக்குமா அதிமுக?

தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கும் சூழலில் தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன.

திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டது முதல் கூட்டணி கட்சிகளோடு இணக்கமான சூழலை உருவாக்கி வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு சரியான ஒதுக்கீட்டை வழங்காததால் தனியாக மக்கள் நல கூட்டணி அமைக்கப்பட்டது.

இதனால் திமுகவோ, ம.ந.கூட்டணியோ சரியான அங்கீகாரத்தை பெற முடியாமல் போனது. ஆனால் தற்போது மக்களவை தேர்தலில் சரியான அளவுக்கு கூட்டணி கட்சிகளுக்கு மதிப்பளித்து இடம் ஒதுக்கியிருக்கிறார் ஸ்டாலின். மேலும் அமமுக நிர்வாகிகள் பலரும் திமுக பக்கம் இணைந்திருக்கிறார்கள். இந்திய ஜனநாயக கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றோரின் ஆதரவும் திமுகவுக்கு கிடைத்திருக்கிறது.

கூட்டணி கட்சிகளின் உதவியுடன், சரியான வியூகம் அமைத்து ஸ்டாலின் களம் இறங்கினால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற கணிசமான வாய்ப்புள்ளது. அதேசமயம் அதிமுகவோ கூட்டணிக்கு மாநில கட்சிகளை விடவும் பாஜகவை பெரிதும் நம்பியுள்ளதாக கூறப்படுகிறது. ம.ந.கூட்டணியிலிருந்து பிரிந்த கம்யூனிஸ்ட், மதிமுக, வி.சி.க போன்ற கட்சிகள் திமுகவுடன் கூட்டணி அமைக்க, தே.மு.தி.கவோ மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்திருக்கிறது.

அதிமுக துணை செயலாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று தானே அடுத்த முதல்வராக வேண்டும் என விரும்புகிறார். ஆனால் கட்சிக்குள்ளேயே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பிளவுகளை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மத்தியில் ஆளும் பாஜகவை நம்பியே அடுத்த தேர்தலை சந்திக்கும் சூழலில் அதிமுக உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மக்களிடையே நட்புறவோடு நடந்து கொள்வதன் மூலம் தன்னை விளம்பரப்படுத்தி கொள்ள முயலும் முதல்வர், பிரதமர் மோடி போலவே வெளிநாடு பயணம், மக்கள் தேவைகளை பூர்த்தி செய்தல், புதிய திட்டங்களை அறிமுகம் செய்தல் போன்ற செயல்களால் மக்களிடையே கொஞ்சம் நற்பெயரையும் பெற்றுள்ளார். ஆனால் சட்டசபை தேர்தலில் பாஜக ரஜினியை டார்கெட் செய்வதாக கூறப்படுகிறது.

ரஜினி கட்சி தொடங்கினால் அவரை கூட்டணியில் இணைக்கவும், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவும் கூட பாஜக தயாராய் இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதாக இருந்தால் அதிமுக அந்த கூட்டணியில் இருக்குமா என்பது சந்தேகமே!

அதிமுக ஒருவேளை பாஜகவை இழந்தால் தேமுதிகவும், பாமகவும் பாஜகவோடு சென்றுவிடலாம். பா.ம.க கூட்டணி அமைக்கும் முன்பு வரை அதிமுகவை விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த குழப்பமான அரசியல் சூழலில் அதிமுக தனது கூட்டணியை வலுப்படுத்தி கொண்டால் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம். குழப்பங்கள் ஏற்பட்டு கூட்டணி கலையும் பட்சத்தில் அதிமுக பலம் வெகுவாக குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு. திமுக கூட்டணி வலுவாக இருப்பது போல, அதிமுகவும் தனது கூட்டணியின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் எழுந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.