ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 1 அக்டோபர் 2019 (17:42 IST)

எப்படியிருந்தாலும் ரஜினிதான் அடுத்த முதல்வர்! : உண்மையை உடைத்த எஸ்.வி.சேகர்???

நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழாவில் எச்.வி.சேகர் ‘ரஜினிதான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்’ என பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சிவாஜி கணேசனின் 92வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் நடிகர் பிரபு, விக்ரம் பிரபு மற்றும் குடும்பத்தினருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் ஆகியோரும் சிவாஜி பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த கூட்டத்தில் பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “நடிகர் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவின் அழிக்க முடியாத அடையாளம். அவரது பிறந்தநாளுக்கு நடிகர் சங்கத்தினர் வந்து கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. விஷால் போன்ற நடிகர்களே இதற்கு காரணம்” என தாக்கி பேசினார்.

பிறகு தமிழக அரசியல் குறித்து பேசிய அவர் “கருப்பு பலூன் விடுபவர்கள் எல்லாம் ஒன்றாக சேரும்போது, அரசியலில் ஒரே கருத்து உடைய ரஜினி பாஜகவில் இணைவதில் என்ன தவறு இருக்கிறது” என்று கேள்வியெழுப்பினார்.

மேலும் “அடுத்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி கண்டிப்பாக போட்டியிடுவார். அவர் முதல்வர் ஆவதற்கும் வாய்ப்புள்ளது. இது எனது கருத்து மட்டுமே! ரஜினி பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும், அல்லது ரஜினியை பாஜகவே முதல்வர் வேட்பாளராக நியமித்தாலும் ரஜினிதான் அடுத்த முதல்வர். அதேசமயம் பாஜக ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் யாராலும் வெற்றிபெற முடியாது” என அவர் கூறியுள்ளார்.

ரஜினி தனிக்கட்சி ஆரம்பிப்பதில் உறுதியாக இருக்கும் சூழலில், அவர் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவாரா அல்லது பாஜகவுடன் கூட்டணி அமைப்பாரா போன்ற பல்வேறு கேள்விகள் இருந்த சூழலில் எஸ்.வி.சேகரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதன்மூலம் ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்தாலும், அவரோடு கூட்டணி வைத்து கொள்ள பாஜக தயாராய் இருப்பதாகவும், அதற்காக அவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தவும் தயாராய் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே பாஜக – ரஜினி கூட்டணி எதிர்கால தேர்தல்களில் இடம்பெறுமா என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த நிலையில் எஸ்.வி.சேகரின் இந்த கூற்று அதை உறுதிப்படுத்துவது போல உள்ளதாக கூறப்படுகிறது.