வெளியான அதிமுக வேட்பாளர் பட்டியல் - துவங்கியது உட்கட்சி சலசலப்பு!
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் குற்றம் சாட்டியிருக்கிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுக போட்டியிட உள்ள தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி பெரும்பான்மையான அமைச்சர்கள் தாங்கள் முன்னர் போட்டியிட்ட தொகுதிகளிலேயே மீண்டும் போட்டியிடுகின்றனர். அமைச்சர் காமராஜ் நன்னிலத்திலும், உடுமலைபேட்டை ராதாகிருஷ்ணன் உடுமலை பேட்டையிலும், ராஜேந்திர பாலாஜி ராஜபாளையத்திலும், வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தவிர அனைத்து தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தனக்கு சீட் வழங்கவிடாமல் தடுத்தது அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான் என்று சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசியதாவது, தொகுதியில் எனக்கு நல்ல பெயரும், மக்கள் செல்வாக்கும் இருக்கிறது. அதனால் எனது வளர்ச்சி பிடிக்காமல் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்னைப்பற்றி தவறான தகவல்களை தலைமையிடம் சொல்லி எனக்கு சீட் வழங்கவிடாமல் தடுத்துள்ளார். இப்போது இருக்கும் நிலையை பார்க்கும் போது ராஜேந்திர பாலாஜிக்காக இயக்கமா அல்லது இயக்கத்தில் ராஜேந்திர பாலாஜியா என தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.