1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (11:56 IST)

புதுச்சேரியில் ஆதியோகி ரத யாத்திரை - ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம்

Adiyogi Yatra
கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த ஆதியோகி ரதத்தை  ஆயிரக்கணக்கான மக்கள் தரிசித்து ஆதியோகியின் அருளைப் பெற்றனர்.

மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் ‘ஆதியோகி ரத யாத்திரை’ ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு 7 அடி உயரமுள்ள ஆதியோகி திருவுருவத்துடன் கூடிய 5 ரதங்கள் கடந்த மாதம் கோவையில் இருந்து புறப்பட்டு தமிழ்நாட்டின் 4 திசைகளில் பயணத்தை தொடங்கின.

அதில் ஒரு ரதம் பிப்ரவரி 3-ம் தேதி மாலை புதுச்சேரி வந்தது. மறுநாள் காலை லாஸ்பேட்டையில் குரு பூஜையுடன் புறப்பட்ட ஆதியோகி ரதம்  சங்கர வித்யாலயா பள்ளி, உழவர் சந்தை, முந்தியால்பேட்டை, பாண்டிச்சேரி டவுன், முதலியார் பேட்டை, இந்திர காந்தி சதுக்கம், கோரிமேடு, தட்டான்சாவடி, கதிர்காமம் என பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்தது. நேற்று முன் தினம் மேட்டுப்பாளையம், ரெட்டியார் பாளையம், முருங்கம்பாக்கம், இரும்பாக்கம், பாகூர் ஆகிய இடங்களுக்கும் பயணித்தது. செல்லும் இடங்களில் எல்லாம் பக்தர்கள் திரளாக கூடி ஆதியோகிக்கு ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர். கோவைக்கு வந்து ஆதியோகியை தரிசிக்க முடியாதவர்கள் தங்களுடைய ஊர்களிலேயே நேரில் தரிசனம் செய்வதற்கு இந்த யாத்திரை சிறந்த வாய்ப்பாக அமைந்தது என பக்தர்கள் தெரிவித்தனர்.
 
Adiyogi Yatra

நான்காம் நாளான நேற்று வில்லியனூருக்கு சென்ற ரதம் இன்று முதல் பிப்ரவரி 10-ம் தேதி வரை விழுப்புரத்தின் பல்வேறு இடங்களுக்கு பயணிக்க உள்ளது.

இந்த யாத்திரையில் பிப்ரவரி 18-ம் தேதி கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலும், புதுச்சேரியிலும் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

உலகில் தோன்றிய முதல் யோகியான சிவன் சப்தரிஷிகளுக்கு (அகத்தியர் உள்ளிட்ட 7 ரிஷிகளுக்கு) யோக விஞ்ஞானம் முழுவதையும் பரிமாறினார். சப்தரிஷிகள் ஒவ்வொருவரும் அந்த விஞ்ஞானத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து சென்றனர். இது ஆன்மீகத்தில் மாபெரும் அமைதி புரட்சி நிகழ அடித்தளமாக அமைந்தது.

இதற்காக, ஆதியோகிக்கு நன்றியை வெளிப்படுத்தும் விதமாக கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 112 அடியில் ஆதியோகியின் மார்பளவு திருவுருவம் சத்குரு அவர்களால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இத்திருமேனியை பாரத பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்தார். ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெறுவதற்காக தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் அங்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.