திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 ஜனவரி 2023 (17:07 IST)

பொருளாதார பலம் இல்லாமல் நாட்டில் எதையும் பாதுகாக்க முடியாது - குடியரசு தின விழாவில் சத்குரு உரை

Isha
“பொருளாதாரத்தில் பலமாக இல்லாவிட்டால் நம் நாட்டில் இருக்கும் கலாச்சாரம், ஆன்மீகம் என எதையும் நம்மால் பாதுகாக்க முடியாது” என ஈஷாவில் இன்று (ஜனவரி 26) நடைபெற்ற குடியரசு தின விழாவில் சத்குரு பேசினார்.
 

தேசிய கொடியை ஏற்றி வைத்த அவர் விழாவில் பேசியதாவது:

பாரத தேசத்தில் வாழும் நாம் ஜாதி, மதம், மொழி, இனம், உணவு பழக்கம், கலாச்சாரம் என பல விதங்களில் வேறுப்பட்டு உள்ளோம். நம்மிடம் எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் பல நூறு ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். சுதந்திரத்திற்கு முன்பு நம் தேசத்தை 600-க்கும் மேற்பட்ட குறு நில அரசர்கள் ஆட்சி செய்து வந்தனர். இருப்பினும், வெளியில் இருந்து வந்தவர்கள் அனைவரும் நம்மை இந்துஸ்தான் அல்லது பாரதம் என்று ஒற்றை பெயர் வைத்தே அழைத்தனர்.

நம்மிடம் இருக்கும் இந்த பன்மைத்துவத்தையும், வேறுபாடுகளையும் பயன்படுத்தி நமக்குள் பிரிவினையை உருவாக்கும் செயல்கள் கடந்த 600 முதல் 700 ஆண்டுகளில் மிகவும் தீவிரமாக நடந்துள்ளன. நம் தேசத்தின் மீது படையெடுத்தவர்களும், ஆக்கிரமித்தவர்களும் இதை பல வழிகளில் மிகவும் திட்டமிட்டு செய்துள்ளனர். குறிப்பாக, நம் தேசத்தின் பொருளாதார முதுகெலும்பை தகர்ப்பதற்கும் அவர்கள் செயல் செய்துள்ளார்கள்.

300 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகளவில் பொருளாதாரத்தில் வளமான தேசமாக நம் பாரத தேசம் இருந்தது. அந்த நிலையை மீண்டும் அடையும் முயற்சியில் நாம் தற்போது ஈடுப்பட்டு உள்ளோம். பொருளாதார பலம் இல்லாமல் கலாச்சாரம், ஆன்மீக விழுமியங்கள் என நாட்டில் உள்ள எதையும் நம்மால் பாதுகாக்க முடியாது. மேலும், நம்மிடம் இருக்கும் பல விதமான வேறுபாடுகளை கடந்து எது நம்மை ஒற்றுமையாக வைத்துள்ளது என்பதை நீங்கள் கண்டறிந்து அதைப் மேலும் பலப்படுத்த வேண்டும்.

இவ்வாறு சத்குரு கூறினார்.
 
Isha

மேலும், குடியரசு தினத்தை முன்னிட்டு சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “#குடியரசுதினம் - மிகப்பெரிய ஜனநாயகமாக ஆனது மட்டுமல்லாமல், துடிப்பான, வேற்றுமைகளுடன் ஒற்றுமையான தேசியத்தின் முத்திரையாக மாறியுள்ள நம் அன்பான பாரதத்தின் அருமையான பயணத்தின் நினைவூட்டல். வலிமையான, அனைவரையும் இணைத்துக்கொள்ளக்கூடிய, கனிவான #பாரதம் உருவாக்குவதற்கு ஒவ்வொரு குடிமகனும் தொடர்ந்து பங்களிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஈஷாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஈஷா சம்ஸ்கிரிதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்கள் தேசப் பக்தி பாடல்களை பாடி விழாவை சிறப்பித்தனர்.

இது தவிர, ஈஷாவின் பிரதான  நுழைவு வாயிலான மலைவாசலில் இக்கரை போளூவாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் திரு. சதானந்தம் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பழங்குடி மக்கள் உட்பட நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பங்கேற்றனர்.