வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 ஜனவரி 2021 (08:07 IST)

தாமிரபரணி ஆற்றில் அதிக தண்ணீர்: திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக நெல்லையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் அதிக நீர் செல்வதாகவும் இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
நெல்லை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கனமழை மணிமுத்தாறு பகுதியில் அதிக கனமழையும் பெய்து வருவதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என நெல்லை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது
 
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு பின்வருமாறு: மேற்குத்தொடர்ச்சி மலையில்‌ பெய்து வரும்‌ மழைப்பொழிவின்‌ காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில்‌ உள்ள பிரதான அணைகளான
பாபநாசம்‌ மற்றும்‌ மணிமுத்தாறு அணைகளும்‌, தென்காசி மாவட்டத்தில்‌ உள்ள கடனா அணை மற்றும்‌ இராமநதி அணை ஆகிய அணைகளிலும்‌ நீர்மட்டம்‌ முழுக்‌ கொள்ளளவை எட்டியதன்‌ காரணமாக அணைகளுக்கு வரும்‌ நீர்‌ வரத்து முழுவதும்‌ அணைகளில்‌ இருந்து தாமிரபரணி ஆற்றில்‌ வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று (14.01.2021) இரவு 7 மணி நேர நிலவரப்படி மேற்படி அணைகளில்‌ இருந்து விநாடிக்கு 19385 கன அடி நீர்‌ தாமிரபரணி ஆற்றில்‌ வெளியேற்றப்படுவதால்‌ ஆற்றில்‌ வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
 
இதன்‌ காரணாமாக பொதுமக்கள்‌ பாதுகாப்பு நிமித்தம்‌ ஆற்றுக்கு சென்று குளிக்கவோ, புகைப்படம்‌ எடுப்பதற்கோ அனுமதி மறுக்கப்படுகிறது. தாழ்வான பகுதியில்‌ வசிக்கும்‌ மக்கள்‌ மாவட்ட நிர்வாகத்தால்‌ ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில்‌ வெள்ளப்பெருக்கு தணியும்‌ வரை தங்கியிருக்க கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌. மேலும்‌ பொங்கல்‌ பண்டிகை கொண்டாட்டமாக சுற்றுலா நிமித்தம்‌ அணைக்கட்டுகள்‌,
அருவிகள்‌ மற்றும்‌ ஆற்றங்கரை உள்ளிட்ட நீர்‌ நிலைகளுக்கு நாளை மற்றும்‌ தொடர்‌ விடுமுறை நாட்களில்‌ செல்ல அனுமதி இல்லை. பொதுமக்கள்‌ பாதுகாப்பு நிமித்தம்‌ மாவட்ட நிர்வாகம்‌ எடுக்கும்‌ இந்நடவடிக்கைகளுக்கு (பொது மக்கள்‌ முழு ஒத்துழைப்பு வழங்கி பாதுகாப்புடன்‌ கவனமாக இருக்க வேண்டும்‌ என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்கள்‌.
 
 
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது