14 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுதலையா? நீதிபதி விதித்த நிபந்தனை..!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 14 ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் நிபந்தனையுடன் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்கள் சமீபத்தில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக 14 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்களது இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 14 பேரையும் அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு மீனவருக்கும் தலா 50,000 அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அபராத தொகையை செலுத்தினால் உடனடியாக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், இல்லையெனில் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனை அடுத்து, 14 மீனவர்களும் அபராதத்தை செலுத்தி விடுதலையாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Edited by Siva