மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்கள் கைது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்..!
கடந்த சில வருடங்களாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவ்வப்போது கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது இலங்கை சிறையில் 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைதிகளாக இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக மீனவர்களின் கைது நடவடிக்கையை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் வலியுறுத்தி வருகிறார் என்பதும், பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர்களுக்கு கடிதம் எழுதி வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், கடந்த வாரம் இரண்டு முறை தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்ததாகவும், கைது செய்யப்பட்ட எட்டு மீனவர்களும் மண்டபம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva