ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்தார்: பா.ஜ.க. பெண் எம்.பி. புகாரால் பரபரப்பு.!
நாடாளுமன்றத்தில் தள்ளுமுள்ளு நடந்தபோது ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்தார் என்றும் அதற்கு தனக்கு அசௌகரியமாக இருந்தது என்றும் பாஜக பெண் எம்பி புகார் அளித்துள்ளார்.
அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பக்கம் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்திய நிலையில் இன்னொரு பக்கம் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்பிகளுக்கு எதிராக பாஜக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் இரண்டு பாஜக எம்பிகள் காயம் அடைந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களும் காயம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் நாகலாந்து மாநிலத்தின் பாஜக பெண் எம்பி பாங்க்னோன் கொன்யாக் என்பவர் போராட்டத்தின் போது ராகுல் காந்தி தனது அருகில் வந்தார் என்றும் அது தனக்கு அசௌகரியமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். நான் படிக்கட்டு அருகே ஒரு பதாகையுடன் நின்று கொண்டிருந்தேன். பாதுகாப்பு பணியாளர்கள் என்னை சுற்றி வளைத்து நுழைவாயிலுக்கு செல்லும் பாதையை உருவாக்கினர். அப்போது ராகுல் காந்தி எனக்காக உருவாக்கப்பட்ட பாதையில் வந்து உரக்க கத்தினார். அவர் எனக்கு மிகவும் அருகில் இருந்ததால், ஒரு பெண்ணாக நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகளின் பெண் எம்பிக்கள் பாஜகவுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
Edited by Siva