காங்கிரஸ் கட்சியின் வன்முறை நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது: கங்கனா ரனாவத்
காங்கிரஸ் கட்சியின் வன்முறை நாடாளுமன்றத்தை அடையும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது என்று பாஜக எம்.பி மற்றும் நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம் நடத்திய நிலையில், எதிர்கட்சிக்கு எதிராக பாஜக எம்.பிக்களும் போராட்டம் நடத்தினர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த சமயத்தில், ராகுல் காந்தி தள்ளியதால் பாஜக எம்.பிக்கள் பிரதாப் சிங் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. காயமடைந்த எம்.பிக்களில் ஒருவருக்கு தையல் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி கங்கனா ரனாவத் "பாஜக எம்.பி ஒருவருக்கு தையல் போடும் அளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் அம்பேத்கார் அல்லது அரசியல் சாசனம் குறித்து காங்கிரஸ் பொய் பிரச்சாரம் செய்யும் போது, அவை முறியடிக்கப்படுகின்றன. ஆனால், தற்போது அவர்கள் வன்முறை செயல்கள் நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது" என்று குறிப்பிட்டார். அவரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran