1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு!

இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நாகப்பட்டினம் மீனவர்கள்
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு மீனவர் காயம் அடைந்தார். இதுபற்றி புகார் செய்யப்பட்டுள்ளது.

அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த மணி, மதன், குமார், பாபு, சிவபெருமாள், கந்தசாமி ஆகியோர் கடந்த 5ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கோடியக்கரைக்கு தென்கிழக்கே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களின் படகை சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் பாபு உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்ததாகவும் உடன் சென்ற மீனவர்கள் தெரிவித்தனர்.

பாபுவை மற்ற மீனவர்கள், கரைக்கு கொண்டு வந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். நாகை மீனவர் இலங்கை கடற்படையால் சுடப்பட்ட சம்பவம் அறிந்ததும் அக்கரைப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கடற்கரையில் திரண்டனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
About Writer
Webdunia