1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

தமிழக நீச்சல் வீரர் அக்னீஸ்வர்க்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு: கருணாநிதி!

ஆசிய நீச்சல் விளையாட்டு போட்டி தங்கப் பதக்கம் தமிழக வீரர் அக்னீஸ்வர் கருணாநிதி
ஆசிய நீச்சல் விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் அக்னீஸ்வர்க்கு ரூபாய் ஒரு லட்சம் ஊக்கப்பரிசு வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஜெ.அக்னீஸ்வர் உலக அளவிலும், தேசிய அளவிலும், மாநில அளவிலும் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு இதுவரை மொத்தம் 126 தங்கப் பதக்கங்களும், 49 வெள்ளிப் பதக்கங்களும், 28 வெண்கலப் பதக்கங்களும் பெற்று மகத்தான சாதனைகள் படைத்துத் தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் மட்டும் 6 தங்கப் பதக்கங்கள் பெற்றுள்ளார் என்பது இவரது பெருமைக்குச் சான்றாகும். அண்மையில், இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில் நடைபெற்ற ஐந்தாவது ஆசிய நீச்சல் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றுத் தங்கப் பதக்கம் பரிசு பெற்றுள்ளார்.

அவரது இந்த சாதனையையும், நீச்சல் போட்டிகளில் இதுவரை அவர் படைத்துள்ள சாதனைகளையும் பாராட்டும் முகத்தான் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் ஊக்கப் பரிசு வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் எ‌ன்று கூறப்பட்டுள்ளது.