1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

‌இதர பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டோ‌ர் இடஒது‌க்‌கீடு ச‌ட்ட‌ம் செ‌ல்லு‌ம்: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்!

உயர் கல்வி நிறுவனங்க‌ள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு இட ஒதுக்கீடு மத்திய அரசின் சட்ட‌ம் உச்ச நீதிமன்றம்
உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 ‌விழு‌க்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் சட்ட‌ம் செ‌ல்லு‌ம் எ‌ன்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்ப‌ளி‌த்தது.

ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு இச்சட்டத்திற்கு தடை விதித்தது.

கடந்த 1931ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்க எதிர்ப்பு தெரிவித்தும், இந்த இட ஒதுக்கீடு சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் என்றும் இதனை எதிர்ப்பவர்கள் தெரிவி‌‌த்தன‌ர்.

இதையடுத்து மத்திய அரசு இது குறித்து மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை ‌நீ‌திப‌தி கே.‌ஜி.பால‌கிரு‌ஷ்ண‌‌ன், நீதிபதிகள் அரிஜித் பசாயத், சி.கே. தாக்கர், ஆர்.வி. ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகியோர் கொண்ட அரசமைப்புக் குழு, உய‌ர் க‌ல்வ‌ி ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் இதர ‌பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்ட வகு‌ப்‌பினரு‌க்கு 27 ‌விழு‌க்காடு இட ஒது‌க்‌கீடு அ‌ளி‌க்கு‌ம் ம‌த்‌திய அர‌சி‌ன் 93 வது அரசியல் சட்ட திருத்தம் செ‌ல்லு‌ம் எ‌ன்று இ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது.

இந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு குழுவில் உள்ள நீதிபதிகளில் நீதிபதி தல்வீர் பன்டாரி மட்டும் எதிராக தீர்ப்பளித்தார்.

அரசமைப்பு குழுவின் பெரும்பான்மையான நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பில், இந்த இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய பிரிவினருக்கு பொருந்தாது என்று கூறியுள்ளது.

ஆனால் தற்சமயம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரில், முன்னேறிய பிரிவினருக்கும் இடஒதுக்கீடு பொருந்தும்.

அத்துடன் இந்த சட்ட திருத்தத்தின் படியான ஒதுக்கீடு சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தாது. இதை அரசு உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்கள் எதிர்க்கவில்லை. எனவே அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது பற்றி அரசின் முடிவுக்கு விடப்படுகிறது.

அரசமைப்பு சட்ட 15 (4 ) மற்றும் 15 (5 ) பிரிவு செல்லும் என்று கூறிய நீதிபதிகள் இட ஒதுக்கீடு கொள்கை நீண்ட காலத்திற்கு அப்படியே நீடிக்க கூடாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து‌ள்ளதா‌ல் 2008ஆம் ஆண்டு முதல் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்ப‌டு‌கிறது.