1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

அலுவலங்களில் புகை பிடிக்க தடை : அமைச்சர் அன்புமணி தகவல்

புகை பிடிக்க தடை அன்புமணி
அலுவலகம் உள்பட வேலை பார்க்கும் அனைத்து இடங்களிலும் புகை பிடிக்க விரைவில் தடை விதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் சார்பில் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கு 'உலக சுகாதார நிறுவன தலைவர் சிறப்பு விருது' வழங்கப்பட்டது. விருதினை உலக சுகாதார நிறுவனத்தின் மண்டல இயக்குனர் சாம்லீ வழங்கினார்.

விருதினை பெற்றுக் கொண்டு, விழாவில் பேசிய மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், புகையிலையினால் நாட்டிற்கு வருமானம் கிடைக்கிறது என்றாலும், அதனால் ஏற்படும் நோயை கட்டுப்படுத்த அரசு அதிக அளவில் செலவிடுவதாக தெரிவித்தார்.

புகைப் பிடிப்பவர்களை விட அதை சுவாசிப்பவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்பதை சுட்டிக்காட்டிய அவர், அரசு, தனியார் அலுவலகங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைத்து வேலை பார்க்கும் இடங்களிலும் புகை பிடிக்க தடையை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக கூறினார்.