1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
  6. அமெரிக்க விமான நிலையத்தில் சிறைவைக்கப்பட்ட பாக். இராணுவத்தினர்!

அமெரிக்க விமான நிலையத்தில் சிறைவைக்கப்பட்ட பாக். இராணுவத்தினர்!

அமெரிக்க விமான நிலையம்
விமான சிப்பந்தியை கேலியாக பேசிய பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் குழுவினரை அமெரிக்க காவல்துறையினர் தடுத்து வைத்து கடுமையாக விசாரணை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்பயுத்தியுள்ளது.

அமெரிக்கா-பாகிஸ்தான் இராணுவ ஆலோசனைக் குழுவின் வருடாந்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் 9 பேர் கொண்ட குழு அமெரிக்கா சென்றது.

இக்குழுவினர் வாஷிங்டனில் உள்ள டல்லஸ் விமான நிலையத்திலிருந்து தம்பா செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.

அப்போது அந்த இராணுவ அதிகாரிகளில் ஒருவர், விமான சிப்பந்தியை பார்த்து, "அநேகமாக நான் பயணம் செய்யும் கடைசி விமானப்பயணம் இதுவாகத்தான் இருக்கும்" என்று கேலியாகக் கூறினாராம். அந்த அதிகாரியின் இந்த பேச்சு விமான சிப்பந்திகளை கோபம் அடையச் செய்தது.

அவர்கள் இது குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்து 9 பேரும் இறக்கி விடப்பட்டனர். இரண்டரை மணி நேரம் தடுத்து சிறை வைக்கப்பட்ட அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் கடுமையாக விசாரணை நடத்தினர். தொலைபேசியில் அவர்கள் யாரையும் தொடர்புகொண்டு பேசவும் அனுமதிக்கவில்லை.

பின்னர் அவர்களால் ஆபத்து ஏதும் இல்லை என்று உறுதி அளித்த பிறகே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிகாரிகள் தங்களை மோசமாக நடத்தியதாக இஸ்லாமாபாத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதனால் கோபமுற்ற பாகிஸ்தான் இராணுவ தலைமை, உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிட்டதையடுத்து அவர்கள் 9 பேரும் நாடு திரும்பினர்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து அமெரிக்க இராணுவ தலைமையிடம் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து நடந்த சம்பவத்திற்காக, அமெரிக்க இராணுவ தலைமையகமான 'பென்டகன்' வருத்தம் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் கூறியுள்ளது.