1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
  6. ஹிரோஷிமா நினைவு நிகழ்ச்சியில் யு.எஸ்., அணு ஆயுத நாடுகள் பங்கேற்பு

ஹிரோஷிமா நினைவு நிகழ்ச்சியில் யு.எஸ்., அணு ஆயுத நாடுகள் பங்கேற்பு

ஹிரோஷிமா
ஹிரோஷிமாவில் அணுகுண்டு போடப்பட்டதன் 65 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்ட நிலையில், இந்நிகழ்ச்சியில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு அணு ஆயுத நாடுகளின் பிரதிநிதிகள் முதன்முறையாக பங்கேற்றனர்.

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானின் நாகசாகி மற்றும் ஹிரோஷிமாவில், அமெரிக்கா அணு குண்டுகளை வீசி தாக்கியது.

இந்த அணுகுண்டு தாக்குதல் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதியன்று நடத்தப்பட்டது. இதில் அந்த இரு நகரிலும் பேரழிவு ஏற்பட்டது.

இந்நிலையில் அந்த நிகழ்வின் 65 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.

ஹிரோஷிமாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட 74 நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதே சமயம் சீனா தரப்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை;அதற்கான காரணத்தையும் அந்நாடு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் ஹிரோஷிமா நினைவு நிகழ்ச்சியில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு அணு ஆயுத நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றதை ஜப்பான் வரவேற்றுள்ளது.

முன்னதாக அணு குண்டு போடப்பட்ட மற்றொரு இடமான நாகசாகிக்கு நேற்று வந்த பான் கி மூன், அணுகுண்டு விழுந்த இடத்தில் கூடிய மக்களிடையே பேசிய அவர், அணு ஆயுதங்களை ஒழிக்குமாறு உலக நாடுகளை கேட்டுக்கொண்டார்.