ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 பிப்ரவரி 2020 (09:38 IST)

பேராசிரியையை பெட்ரோல் வைத்து கொளுத்திய ஆசாமி: காலனாக மாறிய காதல் தொல்லை!

மகாராஷ்டிராவில் ஒருதலை காதல் விவகாரத்தில் பேராசிரியை ஒருவரை ஆசாமி ஒருவர் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் வர்தா மாவட்டத்தை சேர்ந்தவர் அங்கிட்டா. முதுகலைப் பட்டப்படிப்பு முடித்த இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். தினமும் பேருந்தில் கல்லூரிக்கு சென்று வரும் அங்கிட்டாவை அதே பகுதியை சேர்ந்த விக்கி என்பவர் பின்தொடர்ந்து வந்துள்ளார். விக்கிக்கு திருமணமாகி 7 மாத குழந்தையும் உள்ளது. விக்கியின் காதலை அங்கிட்டா ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார். திருமணமானவர் என்பது தெரிந்ததும் பின் தொடர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அங்கிட்டா தனது காதலை ஏற்றுக் கொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த விக்கி கல்லூரிக்கு சென்ற அங்கிட்டா மீது பேருந்து நிலையத்தில் வைத்து பெட்ரோலை ஊற்றியுள்ளார். என்ன நடக்கிறது என அங்கிட்டா சுதாரிப்பதற்குள் அவரை கொளுத்தி விட்டு விக்கி அங்கிருந்து தப்பியுள்ளார். உடல் முழுவதும் தீக்காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அங்கிட்டா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விக்கியை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் வர்தா பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.