சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா சுப்பிரமணியன்
சென்னை உள்பட ஏழு மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
புயல் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கன மழை பெய்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள் இன்று காலை 9 மணி முதல் மாலை வரை நடத்தப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் கூறினார்.
சென்னையில் மட்டும் 200 மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்றும், மற்ற ஆறு மாவட்டங்களில் தலா 50 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட இருப்பதாகவும், தேவை அதிகமாக இருந்தால் முகாம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மருத்துவ முகாம்களில் சளி, காய்ச்சல், ரத்த கொதிப்பு, நீரிழிவு நோய்க்கான பரிசோதனைகள் செய்து கொள்ளலாம் என்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும் என்றும், மேலும் சில அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பு உள்ளவரை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்கள் அருகே அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களை பயன்படுத்திக் கொண்டு பயன் பெற வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Edited by Siva