வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2024 (10:42 IST)

சமாஜ்வாடிக்கு ஓட்டுப்போட மறுத்த பெண் கற்பழித்துக் கொலை? - உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!

Uttar Pradesh

உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ்வின் கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன் என கூறிய இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சமீபத்தில் உத்தர பிரதேசத்தின் கர்ஹால் பகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த தலித் இளம்பெண் ஒருவர் தான் சமாஜ்வாதிக்கு வாக்களிக்க மாட்டேன் என்றும், பாஜகவுக்குதான் வாக்களிப்பேன் என்றும் சமாஜ்வாடி கட்சி நிர்வாகி பிரசாந்த் யாதவ் என்பவரிடம் கூறியதாகவும், அதனால் கோபமான பிரசாந்த் யாதவ், சமாஜ்வாடிக்கு வாக்களிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என இளம்பெண்ணை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் நேற்று இளம்பெண் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு கர்ஹாலில் உள்ள கஞ்சாரா நதி பாலம் அருகே வீசப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்ணின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர், இதற்கு காரணம் பிரசாந்த் யாதவ்தான் என்றும், தங்கள் மகள் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
 

 

அவர்கள் அளித்த புகாரின் பேரில் பிரசாந்த் யாதவ்வும், அவரது நண்பர் மோகன் கத்தேரியாவும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 19ம் தேதி 2 நபர்கள் அந்த பெண்ணை பைக்கில் அழைத்து சென்றதாகவும், அடுத்த நாள் அந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்ததாகவும் கூறப்படுகிறது. இதுத்தொடர்பான சிசிடிவி காட்சிகள் உள்ளதா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரிய வரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K