வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 31 ஆகஸ்ட் 2022 (12:25 IST)

கடத்தல் குழந்தையை விலைக்கு வாங்கிய பாஜக நிர்வாகி! – கட்சியிலிருந்து சஸ்பெண்ட்!

உத்தர பிரதேசத்தில் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையை வாங்கிய பாஜக பெண் நிர்வாகி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசம் மதுரா ரயில் நிலைய சந்திப்பில் கடந்த 24ம் தேதி தம்பதியர் ஒருவர் தங்களது 7 மாத கைக்குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி சத்தமில்லாமல் குழந்தையை திருடி சென்றுள்ளார்.

இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குழந்தை திருடனை பிடித்தனர். விசாரணையில் குழந்தையை திருடன் அப்பகுதியில் உள்ள மருத்துவர்களான தம்பதி ஒருவரிடம் விற்றது தெரிய வந்துள்ளது.

அதை தொடர்ந்து மருத்துவமனை நடத்தி வரும் தம்பதியரை பிடித்து விசாரித்தபோது பரோசாபாத் மாநகராட்சியில் பணியாற்றி வரும் பாஜக பெண் நிர்வாகி வினிதா அந்த குழந்தையை ஒன்றரை லட்சம் கொடுத்து வாங்கியது தெரிய வந்துள்ளது.

பின்னர் வினிதாவின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக குழந்தை திருடன், மருத்துவ தம்பதிகள், பாஜக நிர்வாகி வினிதா அவரது கணவர் உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் பாஜக நிர்வாகி வினிதாவை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளதாக மஹாநகர் சிட்டி பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.