வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (09:08 IST)

இரு நாடுகளும் விரும்பினால் மட்டுமே… - காஷ்மீர் பிரச்சனையில் மீண்டும் ட்ரம்ப் !

சமீபத்தில் காஷ்மீர் பிரச்சனையில் என் உதவியை இந்தியப் பிரதமர் நாடினார் என்று கூறி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சர்ச்சைகளைக் கிளப்பியதை அடுத்து மீண்டும் இப்போது அதுபற்றி பேசியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசியல் பயணமாக அமெரிக்கா சென்ற போது  அவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்துப் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ’ இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீண்டகாலமாக இருக்கும் காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க இந்திய பிரதமர் மோடி என்னிடம் ஜி20 மாநாட்டில் சந்தித்த போது உதவி கேட்டார். அவர் இந்த பிரச்சினையில் மீடியேட்டராக இருக்க விரும்புகிறீர்களா அல்லது நடுவராக இருந்து தீர்க்க விரும்புகிறீர்களா? என்று கேட்டார். நான் இரு நாடுகளுக்கும் இடையிலான மீடியேட்டராகவே இருந்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறேன்’ எனக் கூறினார்.

ஆனால் ட்ரம்ப்பின் இந்த கருத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான ரவீஷ்குமார் ‘காஷ்மீர் பிரச்சனைத் தொடர்பாக ட்ரம்ப்பிடம் எந்த கோரிக்கையையும் இந்தியா வைக்கவில்லை. இது இருநாட்டிப் பிரச்சனை. எல்லையில் நடக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தையும் நடக்கும். எனவே இதில் மூன்றாவது நாட்டின் தலையீடு தேவை இல்லாதது’ எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் ட்ரம்ப்பின் கருத்தை வெளியுறவுத்துறை அமைச்சரும் மறுத்துள்ளார். ஆனால் ட்ரம்ப்பிடம் இதுபற்றி எதுவும் பேசினாரா என்பதை மோடி இதுவரை வாய்திறந்து பேசவில்லை.

இந்நிலையில் ட்ரம்ப் மீண்டும் இந்த பிரச்சனைக் குறித்து பேசியுள்ளார். அதில் ‘இரு நாடுகளும் விரும்பினால் மட்டுமே நான் இந்த மத்தியஸ்தத்தில் ஈடுபடத் தயாராக இருக்கிறேன். இம்ரான்கானும் மோடியும் மிகச் சிறந்தவர்கள். காஷ்மீர் பிரச்சினையில் யாராவது தலையிடலாம் என்று அவர்கள் விரும்பினால் மட்டுமே நான் அதில் தலையிட முடியும். அவர்கள் விரும்பினால், நான் நிச்சயமாக நீண்ட கால பிரச்சினையான காஷ்மீர் பிரச்சினையில் தலையிடுவேன்’ எனக் கூறியுள்ளார். இதனால் இந்திய அரசியலில் மீண்டும் சலசலப்புகள் எழுந்துள்ளன.