வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 4 அக்டோபர் 2019 (12:40 IST)

வெங்கடாஜலபதிக்கு பயங்கரவாதிகளால் ஆபத்தா?! – திருப்பதியில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இந்தியாவில் தீவிரவாதிகளின் ஊடுருவலை தொடர்ந்து திருப்பதி கோவில் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் எதிரொலியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. சமீபத்தில் இராமநாதபுரம் கடல் பகுதியில் ஆள் அரவமற்ற படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன்மூலம் தீவிரவாதிகள் தென் இந்தியாவில் ஊடுருவியிருக்கலாம் என கூறப்படுகிறது.

தற்போது இந்தியா முழுவதும் விழாக்காலங்கள் என்பதால் பல்வேறு மக்கள் கூடும் இடங்களில் அவர்கள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது திருப்பதியில் பிரம்மோர்ஸவ விழா நடைபெற்று வருகிறது. நாடு முமுவதிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் பிரம்மோற்சவ நிகழ்வை கண்டுகளிக்க வருகை புரிகிறார்கள்.

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்துக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சுமார் 1600 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு ஒவ்வொரு பகுதியும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் முக்கியமான பகுதிகளில் குறிப்பார்த்து சுடும் ஸ்னைப்பர் வீரர்கள் உயரமான இடங்களில் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். திருப்பதிக்குள் வரும் ஒவ்வொரு வாகனமும், பயணிகளும் பல்வேறு சோதனைகளுக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.