’ட்ரெயின்ல வெடிகுண்டு இருக்கு?’ எச்சரித்த விமானப்படை அதிகாரி! – டெல்லியில் அதிர்ச்சி!
புதுடெல்லி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட இருந்த ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக விமானப்படை சார்ஜெண்ட் எச்சரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி ரயில் நிலையத்தில் இருந்து மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் நேற்று மாலை 4.55க்கு புறப்பட இருந்தது. இந்நிலையில் கட்டுப்பாட்டு அறைக்கு மாலை 4.48 மணியளவில் வந்த அழைப்பில் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரயில் புறப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டதுடன், வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவினர், ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். ஆனால் அதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. உடனடியாக அழைப்பு வந்த எண்ணை சோதனை செய்துள்ளனர்.
அதில் வெடிகுண்டு எச்சரிக்கை விடுத்தவர் இந்திய விமானப்படையில் பணிபுரியும் சார்ஜெண்ட் சுனில் சங்வான் என தெரிய வந்துள்ளது. உடனடியாக அவரை தேடி அவர் இருந்த ரயில் பெட்டியில் இருந்து அவரை அழைத்து விசாரித்துள்ளனர். விசாரணையில் அவர் மது அருந்தியிருந்ததும், ரயிலை பிடிக்க வந்தபோது போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் ரயில் புறப்படுவதை தாமதப்படுத்த போலியான எச்சரிக்கையை விடுத்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Edit By Prasanth.K