பதிவு செய்ததைவிட 5 மடங்கு பணம்: ஏடிஎம் குளறுபடியால் பொதுமக்கள் மகிழ்ச்சி
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் ஒன்றில் பதிவு செய்ததை விட ஐந்து மடங்கு பணம் வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியும் வங்கி நிர்வாகிகள் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் நகரில் ஆக்சிஸ் வங்கியின், ஏ.டி.எம்., மையம் ஒன்றில் பணம் எடுக்க வந்தவர்களுக்கு தாங்கள் பதிவு செய்த தொகையை விட, ஐந்து மடங்கு பணம் வந்ததால் இன்ப அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அடைந்தனர்
ஒருசில மணி நேரத்தில் ரூ.1000 எடுத்தவருக்கு ரூ.5000மும், ரூ.4000 பணம் எடுக்க வந்தவருக்கு ரூ.20 ஆயிரமும் ஏடிஎம் மிஷினில் இருந்து வெளியே வந்தது. ஆனால் அவர்களுடைய வங்கி கணக்கில் அவர்கள் பதிவு செய்த தொகை மட்டுமே கழிக்கப்பட்டிருந்தது. இதனையறிந்த பலர் அந்த குறிப்பிட்ட ஏடிஎம்-இல் பணம் எடுக்க முண்டியடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அந்த ஏடிஎம் மையத்திற்கு வந்து பணம் எடுக்க வந்தவர்களை வெளியேற்றிவிட்டு ஏடிஎம் மையத்தை பூட்டினர். இதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து ஆக்சிஸ் வங்கியின் துணை மேலாளர் பிரவீன் பைஸ் கூறியதாவது: இதுவரை இரண்டு லட்சம் ரூபாய் வரை இந்த ஏடிஎமில் எடுக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்.,மில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் டெபிட் அட்டை பதிவுகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கார்டுதாரர்களிடம் இருந்து, அவர்கள் கூடுதலாக பெற்ற தொகை திரும்ப பெறப்படும் அல்லது அவர்களது வங்கி கணக்கில் கழிக்கப்படும் என்று கூறினார்.