வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (12:45 IST)

மருத்துவ மாணவி கொலை வழக்கு.! வழக்குப்பதிவு செய்ய தாமதம் ஏன்.? மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!

Supremecourt
கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில், தாமதமாக வழக்கு பதிவு செய்தது ஏன் என்று மேற்குவங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.மேலும் விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் 22 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.
 
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில்  31 வயது பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த சம்பவம் பற்றி சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. மாணவி கொலை வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. 
 
மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தேசிய அளவில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகள் என்பது காகித அளவில் இல்லாமல் செயலில் இருக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு காட்டமாக தெரிவித்தது. இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்னை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த மருத்துவர்களின் பிரச்னை என்றும் மருத்துவர்களின்  பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
 
உயிரிழந்த பெண்ணின் புகைப்படங்கள் அதிகளவில் வெளியாகி உள்ளது என்றும் இதுகுறித்து போலீசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?  என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கில் தாமதமாக வழக்கு பதிவு செய்தது ஏன் என்று கண்டனம் தெரிவித்த நீதிபதிகள்,  பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் அவர்களுக்கு சம உரிமை மறுக்கப்படுவதாக அர்த்தம் என்றும் குற்றம் நடந்த பகுதிகளை சீலிடாதது ஏன் ? என்றும் மாணவி தற்கொலை தான் என பெற்றோரிடம் கூறியது யார் ? என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
 
மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தும் வரை போலீசார் பார்த்து கொண்டிருந்தது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தற்கொலை வழக்காக பதிவு செய்ய முயற்சித்ததாக சந்தேகம் வருகிறது என்று குறிப்பிட்டனர். மருத்துவர்களை பாதுகாத்திட  மேற்கு வங்க அரசு தவறி விட்டது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அமைதியாக போராடுவோர் மீது மேற்குவங்க அரசு தனது அடக்குமுறையை காட்டக் கூடாது என்றும் மருத்துவர்கள்  அல்லது பொதுமக்கள் மீது எந்த அரசும் அதிகாரத்தை ஏவி விடக்கூடாது என்றும் குறிப்பிட்டனர். 

 
ஆர்.ஜி.கார் மருத்துவமனை முதல்வர், பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி செய்கிறார் என தெரிவித்த நீதிபதிகள்,  விசாரணை அறிக்கையை வரும்  வியாழக்கிழமைக்குள் (ஆகஸ்ட் 22) சி.பி.ஐ. சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.